பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களை ஒருபோதும் பொருத்துக்கொள்ள முடியாது என்றும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ தினத்தை ஒட்டி, டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண் வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்புக்கு கேப்டன் தானியா ஷேர் கில் என்ற பெண் ராணுவ அதிகாரி தலைமையேற்று நடத்தினார்.
வீர தீர செயல்களை புரிந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.
பின்னர் பேசிய அவர், முன்பை விட ராணுவத்தின் திறன் அதிகரித்துள்ளது என்றார். பயங்கரவாதத்தை பொறுத்து கொள்ள மாட்டோம் என்ற அவர் அதற்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
இதற்கான பல வாய்ப்புகள் ராணுவத்தின் முன் உள்ளது என்றும் இதனை பயன்படுத்த ராணுவம் தயங்கவில்லை என்றும் அவர் கூறினார். காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும், இதனால், மேற்கத்திய அண்டை நாட்டின் திட்டமும், மறைமுக போரும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.