இந்திய ராணுவம், நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் திறன் படைத்தது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
இன்று 72 ஆவது இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி டுவட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என்று பாராட்டியுள்ளார்.
சமீமா என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு உரிய சமயத்தில் ராணுவம் செய்த உதவியை குறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே டெல்லி கண்டோன்ட்மென்டில் உள்ள கரியப்பா பரேடு மைதானத்தில் ராணுவ தின கொண்டாட்டங்கள் களை கட்டின.
ராணுவத்தினரின் வண்ணமிகு அணிவகுப்புகள் கண்ணைக் கவர்ந்தன. முழுதும் ஆண் வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்புக்கு கேப்டன் தானியா ஷேர் கில் என்ற பெண் ராணுவ அதிகாரி தலைமயேற்று நடத்தியது அனைவரையும் கவர்ந்தது.
ராணுவ தினத்தை ஒட்டி வீர தீர செயல்களை புரிந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.
ராணுவ தினத்தை ஒட்டி அவர் வெளியிட்ட செய்தியில், எல்லைகளை ராணுவம் உறுதியுடன் பாதுகாத்து வருவதாகவும், எந்த விதமான போர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள அது தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி போர் நினைவுச் சின்னத்தில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, கடற்படைத் தளபதி கராம்பீர் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.