சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு ஹீமோடயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் டிரைஃபெரிக் (triferic) மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளதாக, சன் ஃபார்மா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மரணத்திற்கு காரணமான நோய்களில் 10 ஆவது இடத்தில் சிறுநீரக நோய் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டயாலிசிஸ் செய்யும் போது ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, நோயாளிகள் ரத்தசோகைக்கு ஆளாகின்றனர்.
இதை சரி செய்வதற்கான இரும்புச் சத்து நிறைந்த டிரைஃபெரிக் என்ற புதிய மருந்தை அமெரிக்காவின் ராக்வெல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மருந்தை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான உரிமத்தை தாங்கள் பெற்றுள்ளதாக சன் பார்மசூட்டிகல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அரசின் அனுமதி பெற்று இந்த மருந்தை சந்தைப்படுத்த உள்ளதாகவும் அது கூறி உள்ளது.