பிராட் பேண்ட் இணையதள சேவை, போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கான 2 ஜி செல்போன் சேவை ஆகியவற்றை மீண்டும் வழங்கியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, மாநிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதே தினம் அங்கு இணையதள சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் முடக்கப்பட்டன.
இதை எதிர்த்து தாக்கலான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இணையதள சேவை அடிப்படை உரிமை என்பதால் அதை புனரமைப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், ஜம்முவில் ஹோட்டல்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கான இணையதள சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் சமூக வலைதளங்கள் மீதான தடை தொடர்கிறது.