குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தம்முடன் விவாதிக்க டெல்லிக்கு வருமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.
அதன்பின்னர் பிரதமர் மோடியை மம்தா சந்தித்துப் பேசினார். அப்போது, குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை மக்களிடையே பிரிவினையை வளர்ப்பதாக மம்தா தெரிவித்தார். இதைக்கேட்ட மோடி தம்மை டெல்லிக்கு வருமாறு அழைத்ததாக மம்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரதமரை சந்தித்து விட்டு திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுடன் மம்தா இணைந்துக் கொண்டார். ஆனால், மம்தாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மேடையில் ஒன்று பேசுவதாகவும் மோடியை சந்தித்து பேசும்போது வேறு மாதிரி பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த மம்தா, தமக்கு யாரும் அரசியலை கற்றுத் தரவேண்டாம் என்று தெரிவித்தார்.