எந்தவிதமான போருக்கும் ராணுவம் தயாராக உள்ளதாக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், எதிர்கால போர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார். எந்த நேரத்தில், எந்த விதத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
ராணுவம் இந்திய அரசியலமைப்பிற்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்பு இருந்ததை விட இந்திய ராணுவம் இப்போது பலமாகவும், சிறப்பாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒட்டு மொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தமானது என அரசு அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரையும் வசப்படுத்த நாடாளுமன்றம் கட்டளை இட்டால் ராணுவம் அதனை செய்து முடிக்கும் என்றார்.
இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையிலான நேரடி தொலைபேசி வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார். பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.