அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தை தணிக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கையை வரவேற்பதாக டெல்லியில் உள்ள ஈரான் தூதர் கூறியுள்ளார்.
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து பதற்ற நிலை உருவானது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் தூதர் அலி செகனி (ali chegeni), இந்தியா சமாதான முயற்சியில் ஈடுபட்டால் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை இன்று அவர் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். உலகில் அமைதி நீடிக்க இந்தியா தொடர்ந்து சீரிய பணியாற்றி வருவதாக தெரிவித்த ஈரான் தூதர், இந்தியா சிறந்த நட்பு நாடு என்றும் பதற்றம் அதிகரிப்பதை அது அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வளைகுடாவில் அவசர நிலை ஏற்பட்டிருப்பதால் இந்தியர்களுக்கு உதவ போர்க்கப்பல்களை இந்திய கடற்படை அனுப்பி வைத்துள்ளது. திரிகண்ட் என்ற கடற்படை கப்பல் ஓமன் வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 போர்க்கப்பல்களும் இந்திய விமானப்படையின் விமானங்கள், ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.