நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பது தொடர்பாக முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத விதத்தில் 2வது காலாண்டில் நான்கரை சதவீதமாக குறைந்துள்ளது. இதையடுத்து நடப்பு நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பீட்டை குறைத்துள்ளது.
முதலீடு மற்றும் மக்களின் நுகர்வு குறைந்தது, வேலைவாய்ப்பு அதிகரிக்காதது போன்றவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தொழிலதிபர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தினார். ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, ஆனந்த் மகிந்திரா, கவுதம் அதானி, சுனில் மிட்டல், டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.