தமிழகத்தில் 6 எம்பிக்கள் உள்பட நாடு முழுவதும் 73 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் நடப்பாண்டு நடக்க உள்ளது.
250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்கு 83 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில், பாஜகவைச் சேர்ந்த 18 பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 பேர் உள்பட 69 பேரின் பதவிக்காலம் இந்த ஆண்டில் முடிவடையவுள்ளது. இதுதவிர ஏற்கெனவே 4 இடங்கள் காலியாக உள்ளதால், இந்த ஆண்டில் மாநிலங்களவைக்கு மொத்தம் 73 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இதில் அதிமுகவைச் சேர்ந்த சசிகலா புஷ்பா, செல்வராஜ், விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன் ஆகியோரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜன் ஆகியோரும் அடங்குவர். இவர்களைத் தவிர மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ராம்தாஸ் அத்வாலே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரி பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.