விவசாயத்திற்கு உதவும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளில் புதிய புரட்சி ஏற்பட வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். விண்வெளியில் பெற்ற வெற்றியை போலவே ஆழ்கடல் ஆய்விலும் இந்தியா வெற்றி காண வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற 107 வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, புதிய புத்தாண்டில் முதல் நிகழ்ச்சியாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
புதிய கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசை குறியீட்டில், இந்தியா 52வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்ற அவர், கடந்த 50 ஆண்டுகளை விட கடந்த 5 ஆண்டுகளில் அதிக தொழில்நுட்ப மையங்கள் உருவாகியுள்ளது என்றார். இதற்கு மத்திய அரசின் திட்டங்களே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
பயிர்க்கழிவுகள் எரிப்பு உள்பட விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும் நிபுணர்கள் தீர்வு காண வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். விவசாயத்திற்கு உதவும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளில் புதிய புரட்சி நடைபெற வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
விண்வெளி துறையில் இந்தியா பெற்ற வெற்றி, ஆழ்கடல் ஆய்விலும் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நீர், ஆற்றல், உணவு மற்றும் தாதுக்கள் நிறைந்த கடல் வளங்களை ஆராய்ந்து வரைபடமாக்கி பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
கண்டுபிடிப்பு, காப்புரிமை, உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை இளம் விஞ்ஞானிகள் தாரக மந்திரமாக வைக்க வேண்டும் என்றும், இந்த நான்கும்தான் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி அழைத்து செல்லும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.