குடியுரிமை தொடர்பாக சட்டம் கொண்டுவர மாநில சட்டப்பேரவைகளுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை தொடர்பாக எந்த சட்டம் நிறைவேற்றவும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக விளக்கம் அளித்தார். பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் என்றும், இந்தியாவில் உள்ளவர்களின் குடியுரிமைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் அரசுகள் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியதைப் போன்றதுதான் இது என்று கூறியஅவர், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பிரசாரங்கள், சுயநலத்துக்காக செய்பவை என்று தெரிவித்தார்.தேசிய மக்கள்தொகை பதிவேடு இந்திய குடிமக்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.