சூரியனை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் புரோபா - 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மாலை 4.04 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
திட்டமிட்ட பாதையில் பயணித்த ராக்கெட், ஏவியதில் இருந்து 18ஆவது நிமிடத்தில் 2 செயற்கைக்கோள்களையும் புவியின் நீள் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
பூமிக்கும் 2 செயற்கைக்கோள்களுக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 60,530 கிலோ மீட்டர் தூரமாக இருக்கும் என்றும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு மேற்கொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன், இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி புரோபா - 3 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.