பாரிஸ் ஒலிம்பிக் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஐக்கிய மல்யுத்த கூட்டமைப்பிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரிடம் பிரதமர் மோடி பேசி உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக வினேஷுக்கு முழு ஆதரவளித்த மத்திய அரசு, அவருக்காக தொடர்ந்து குரல் தரும் என்றும் மாண்டவியா விளக்கமளித்துள்ளார்.