மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்ச்சியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறார்கள் உயிரிழந்தனர்.
சாகர் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் கிராமத்தில் ஹர்தல் பாபா கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவின் ஒரு பகுதியாக, சிறார்கள் பலர் மண் சிவலிங்கங்களை செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்த சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இதில் பலர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் 10 முதல் 15 வயதிற்குட்பட்ட 9 சிறார்கள் உயிரிழந்தனர். சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் அந்த சுற்றுச்சுவரின் அடித்தளம், அண்மையில் பெய்த மழையால் வலுவிழந்திருக்கலாம் என மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.