வயநாடு நிலச்சரிவில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள முண்டக்கை மற்றும் பூஞ்சரி மட்டம் பகுதியில் 150 வீடுகள் மண்ணில் புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பல கிலோ மீட்டர் தொலைவில் சாலியாற்றில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்த சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. சாலியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்களும், உடல் பாகங்களும் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இன்றும் மீட்கப்பட்டது. சாலியாற்றில் படுகையில் மண்ணில் புதைந்த நிலையில் 54 சடலங்களும், 84 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
நிலச்சரிவு நடந்த இடத்திற்கு அருகில் இருந்த பூஞ்சரி மட்டம், முண்டக்கை ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 150 வீடுகள் மண்ணிற்குள் புதைந்து அந்த பகுதி பள்ளதாக்கு போன்று மாறிவிட்டதாக மீட்பு குழுவினர் கூறுகின்றனர். தங்களது குடும்பத்தினரையும், உறவினர்களையும் இழந்த, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு சிலர் உயிர் தப்பி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதிக்கு சற்று கீழே பூஞ்சரி மட்டம் எனும் 100 வீடுகளை கொண்ட மலை கிராமம் இருந்துள்ளது. இந்த 100 வீடுகளும் சரிந்து பாறை, மரம், மண்ணோடு கட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அதற்கு கீழிருந்த அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த முண்டக்கை கிராமத்தை அப்படியே மூடியதாக கூறப்படுகிறது.
மண்ணிற்குள் புதைந்த முண்டைக்கை பகுதியில் சுமார் 50 வீடுகள் இருந்ததாகவும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு பகுதியிலும் தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்த தமிழ் குடும்பத்தினரும் வசித்ததாக கூறுகின்றனர்.
தேயிலை தோட்டத் தொழிலுக்காக பல்வேறு காலகட்டங்களில் வயநாட்டிற்கு புலம்பெயர்ந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 60 பேரை இதுவரை காணவில்லை எனவும், 10-ற்கும் மேற்ப்பட்ட தமிழர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் முகவரி வைத்திருக்கும், வேலைக்காக வயநாடு வந்து உயிரிழந்தவர்கள் என்ற கணக்கின்படி 3 பேரின் சடலங்கள் மட்டும் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக வயநாட்டில் மீட்பு பணிக்கு சென்றுள்ள தமிழக ஐஏஎஸ் அதிகாரி சமீரன் விளக்கமளித்துள்ளார். வயநாட்டில் பல ஆண்டுகளாக இங்குள்ள முகவரியில் வசிக்கும் தமிழர்கள் கேரள அரசின் நிவாரண பட்டியலில் வருவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே மண்ணில் புதையுண்ட சடலங்களை மீட்க மோப்ப நாய்களை பயண்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்ட் ராணுவத்தினர், பூஞ்சரி மட்டம் பகுதியில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளில் சிக்கிய 45 வயது நபர் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர். முண்டக்கை பகுதிக்கு சூரல்மலை பகுதியில் இருந்து மீட்பு வாகனங்கள் செல்லும் வகையிலான பெய்லி எனும் இரும்பு பாலத்தை இந்திய ராணுவம் அமைத்து முடித்துள்ள நிலையில், முண்டக்கை பகுதியில் முழுமையான மீட்பு பணிகள் நாளை முதல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.