வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 1,500க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 50 பேரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற இடங்களில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்தாலும், முண்டக்கையில் மீட்பு நடவடிக்கை சவாலாக உள்ளதென மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இருநூறை கடந்துள்ள நிலையில், சாலியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள், உடல் பாகங்கள் மீட்கப்பட்டு வருகிறது. வயநாட்டில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 38 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் சற்று வடிந்த நிலையில் பாறை இடுக்கிலும், மரக்கிளையிலும், மண்ணில் புதைந்த நிலையிலும் உடலின் பாகங்களை கண்டெத்து மீட்பு குழுவினர் மீட்டனர்.
சூரல்மலை உட்பட பிற பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணி நடந்து வரும் நிலையில், கடும் பாதிப்பை சந்திந்துள்ள முண்டக்கை பகுதியில் மீட்பு பணி சவாலானதாக உள்ளது. புது வழித்தடத்தில் உருவாக்கியுள்ள ஆற்றில் உருண்டு கிடக்கும் பெரும் பாறைக்கற்களுக்கு கீழ் மண்ணுக்கு அடியில் சிக்கிய வீடுகள், அதில் சிக்கியவர்களின் சடலங்களை மீட்பதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. பாறைகளை வெட்டி அகற்றும் எந்திரங்களும், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களும் கொண்டு வந்தால் தான் அங்கு மீட்பு பணிகளை தொடங்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, மீட்பு வாகனங்கள் செல்லும் வகையிலான தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. GFX 1 Out
முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுமார் 50 பேரை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடிச் சென்ற குடும்பத்தினர் மேப்பாடியில் வைக்கப்பட்டுள்ள முகம் சிதைந்த உடல்களில் அணிகலன்கள் உள்ளிட்டவற்றை வைத்தே அடையாளம் காண வேண்டியுள்ளதாக கூறுகின்றனர்.
காணாமல் போன தனது அண்ணன் குடும்பத்தினரை தேடி அலையும் சேலத்தை பூர்வீகமாக கொண்ட மாரியம்மாள் என்ற பெண், எதேச்சையாக முந்தைய நாள் பார்ப்பதற்காக வந்த தனது மகனால் நானும், தனது கணவரும் மீட்க்கப்பட்டோம் என கூறி, நிலச்சரிவில் உயிர் தப்பியது எப்படி என விளக்கினார்.
முண்டக்கை பகுதியில் சில வீடுகளை நிலச்சரிவுடன் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அருகில் இருந்த குளத்தில் மூழ்கடித்ததாகவும், மண்ணாலும், பாறை கற்களும் மூடியுள்ள அவ்விடத்தில் தோண்டினால் தான் சடலங்களை மீட்க முடியும் என குடும்பத்தினர் கூறுகின்றனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக வயநாட்டில் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த மூதாட்டி சாந்தி என்பவர் தனது குடும்பத்தினர் 9 பேரும் வீட்டுடன் அடித்துச் செல்லப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதனிடையே போர்கால அடிப்படையில் இரும்பு பாலங்களை அமைக்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் உபகரணங்களை கண்ணூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய ராணுவம், மண்ணக்கு அடியில் சடலங்களை கண்டறிய பயிற்சி பெற்ற மோப்பநாய்களையும் டெல்லியில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.