மேற்கு வங்கத்தில் கஞ்சஞ்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சீல்டா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது, கஞ்சஞ்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில். நியூ ஜல்பைகுரியை அடுத்த ஃபான்ஸிதேவா என்ற ஊரில் சிக்னலுக்காக காத்திருந்த போது, அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில், கண்ணிமைக்கும் நேரத்தில் கஞ்சஞ்சங்கா எக்ஸ்பிரஸின் பின்புறத்தில் மோதியது.
விபத்தில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 3 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. கஞ்சன்ஜங்காவின் பெட்டிகள் அந்தரத்தில் தூக்கியபடி நிற்க, அதற்குக் கீழ் சரக்கு ரயிலின் எஞ்சின் புகுந்து நின்றது. சரக்கு ரயிலில் இருந்த ஏராளமான கண்டெய்னர்கள் கீழே உருண்டு சரிந்தன.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவக் குழுவினரும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ரயிலின் உருக்குலைந்த பாகங்களை வெட்டி எடுத்து உள்ளே சிக்கி இருந்தவர்கள் மீட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் நியூ ஜல்பாய்குரி மருத்துவனைக்கு ஆம்புலன்சுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நேரிட்ட இடத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
விபத்து நேரிட்டுள்ள இடம் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் முக்கியமான தடம் என்பதால் போக்குவரத்தை விரைவில் சீர் செய்யும் வகையில், எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயிலின் உருக்குலைந்த பெட்டிகள் விரைவாக அகற்றப்பட்டன.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ரயில்வே அதிகாரிகள், சரக்கு ரயிலின் ஓட்டுநர் சிக்னலை கவனிக்காமல் இயக்கியதே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறினர். சரக்கு ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், விபத்துக்கு வேறு மனிதத் தவறுகள் காரணமா என்ற விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.