புதுச்சேரி நகர பகுதியில் மதுபோதையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை காரால் இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்ற இளைஞரைப் பிடித்து தர்மஅடி கொடுத்த வாகன ஓட்டிகள் காரை அடித்து நொறுக்கினர்.
புதுச்சேரி - கடலூர் சாலை மரப்பாலம் பகுதியில் மின்னல் வேகத்தில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 10-க்கும் மேற்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளி விட்டு, நிற்காமல் சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சிலர் அந்த காரை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர். இந்திராகாந்தி சதுக்கம் அருகே காரை வழிமறித்து அடித்து நொறுக்கிய வாகன ஓட்டிகள், காருக்குள் பெண் ஒருவருடன் போதையில் இருந்த இளைஞரை வெளியே இழுத்து சரமாரியாகத் தாக்கினர்.
சிலர் காரை கற்களைக் கொண்டு அடித்து சேதப்படுத்தினர்.
நிலைமையை உணர்ந்த போக்குவரத்து போலீசார், அந்த இளைஞரை மீட்டு அழைத்து செல்ல முயல மக்கள், விரட்டி விரட்டித் தாக்கினர்
பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி ஆட்டோ மூலம் கிழக்கு போக்குவரத்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கமலநாதன் என்பதும், புதுச்சேரிக்கு
தனது தோழியுடன் காரில் லாங் டிரைவ் வந்து மூக்கு முட்ட மது அருந்தி விட்டு விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.