2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திரா, தெலங்கானா, கேரளா உட்பட 22 மாநிலங்களில் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக கூறினார்.
ஜூன் 1-ஆம் தேதி வரை இடைவெளி விட்டு 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படும் என்று தெரிவித்த அவர், நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று கூறினார்.
ஏப்ரல் 19-ஆம் தேதி சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேசத்திலும், மே 13-ஆம் தேதி ஆந்திராவிலும், மே 13, 20, 25, ஜூன் 1-ஆம் தேதிகளில் ஒடிஷாவிலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளதாகவும் ராஜிவ் குமார் அறிவித்தார்.