புதுச்சேரியில் 9 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, கொலை செய்து கை,கால் கட்டப்பட்டு வேஷ்டியில் கட்டி வாய்க்காலில் வீசிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்
9 வயது சிறுமியை கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, கொலை செய்து, கைகால்களை கட்டி வாய்க்காலில் வீசிய சம்பவம் புதுச்சேரியை போராட்டக்களமாக மாற்றியுள்ளது.
வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த தங்களது 9 வயது மகளை காணவில்லை என புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதி முத்தியால் பேட்டை காவல்நிலையத்தில் சனிக்கிழமையன்று புகார் அளித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அச்சிறுமி அவர் வசிக்கும் தெருவிலேயே தனியாக நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
போதிய எண்ணிக்கையில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்படாததால்,
தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைத்து தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. திங்கள் கிழமை காலை போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சோலை நகர் அருகாமையில் உள்ள அம்பேத்கர் நகர் வாய்க்கால் பகுதியில் வெள்ளைத் துணியில் உடல் ஒன்று இருப்பதை கண்டனர் அந்த துணியை திறந்து பார்த்ததில் துணிக்குள் சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து அங்கிருந்து உடலை கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
சிறுமியின் தந்தை சாலை மறியல் நடக்கும் இடத்திற்கு வந்து கதறி அழுது தன் மகளை கொலை செய்தவர்களை விட்டு விடாதீர்கள் என காவல்துறை அதிகாரியிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்தார்.
விசாரணையில், சடலம் கிடந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெற்றோர்களுடன் சேர்ந்து போராடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் கருணாஸ் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், குற்றம் புலானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமான கருணாஸ் ஐஸ்கிரீம் கொடுத்து சிறுமியை ஏமாற்றி அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதான தச்சுச்தொழிலாளி விவேகானந்தனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட போது சிறுமி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இரு காமக்கொடூரர்களும் சேர்ந்து சிறுமியின் கை கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் சுற்றி வீட்டின் பின்புறம் உள்ள வாய்காலில் வீசி விட்டு சென்றது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி கொல்லப்பட்ட தகவலை அடுத்து புதுச்சேரியில் பல இடங்களில் நீதிகேட்டு உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உயிரிழ்ந்த சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நிவாரணமாக 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் தங்களது கடமை முடிந்துவிட்டது என கருதாமல், புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் உதவியுடன் சிசிடிவி கேமிராக்களை பொருத்தவேண்டும். அதேபோல், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களின் விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒழிப்பதே நிரந்தர தீர்வாக அமையும்.