மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி விவகாரத்தில் அப்பகுதி பெண்களின் நலனைவிட அரசியல்தான் மம்தா பானர்ஜிக்கு முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய மோடி, சந்தேஷ்காளி விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியைப் பாதுகாக்க மம்தா அரசு முயற்சித்ததாகவும், இண்டியா கூட்டணி தலைவர்கள் அதைப் பார்த்து அமைதியாக இருந்ததைக் கண்டு வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக இருப்பதும், வாரிசு அரசியலை ஊக்குவிப்பதுமே காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஒரே குறிக்கோள் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சியை மம்தா விரும்பவில்லை என்றும், அனைத்து மட்டத்திலும் திரிணமூல் காங்கிரஸ் ஊழல் செய்வதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆட்சியில் இருந்து அக்கட்சி விரட்டப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.