தலைநகர் டெல்லியை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச விவசாய சங்கத்தினர் டெல்லி எல்லையில் குவிந்துள்ளனர்.
விவசாயிகள் டெல்லிக்குள் செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் நுழைவு வாயில்களில் முள்வேலி மற்றும் கான்கிரீட் தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனால், டெல்லி - குருகிராம் மற்றும் டெல்லி - நொய்டா விரைவு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி எல்லையில் உள்ள காசிப்பூர், சிங்கு, ஷாம்பூ நகரங்களில் குவிந்துள்ள விவசாயிகள், 6 மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினர். ஷாம்பு எல்லையில் திரண்ட விவசாயிகள், கான்கிரீட் தடுப்புகளை அகற்ற முயன்ற போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
பஞ்சாப் மற்றும் அரியானா எல்லையில் குவிந்துள்ள விவசாயிகள், டிராக்டர்களைப் பயன்படுத்தி தடுப்புகளை அகற்ற முற்பட்டனர்.