இமாச்சல பிரதேசத்தில் 200 அடி பள்ளத்தில் சட்லஜ் நதிக்குள் கார் விழுந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றிதுரைசாமியின் உடல் மீட்கப்பட்டது. போலீசார் ஆற்றில் போட்ட பொம்மையால் உடல் மீட்கப்பட்ட பின்னணி விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி . 43 வயதான வெற்றிதுரைசாமி இமாச்சல பிரதேசம் சென்றிருந்த நிலையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு இன்னோவா காரில் விமான நிலையம் புறப்பட்டுள்ளார். அவரது கார் கசாங் நாலா என்ற பகுதியில் வந்த போது பாறை ஒன்று மோதி கார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்தோடும் சட்லெஜ் நதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது
கார் டிரைவர் தன்ஜின் இறந்து விட, வெற்றியின் நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றித்துரைசாமியின் நிலை என்னவென்பது தெரியாமல் இருந்த நிலையில் சீல் பெல்ட் அணியாமல் காரில் பயணித் திருக்கலாம் என்று தெரிவித்த இமாச்சல பிரதேச காவல்துறையினர் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் துணையுடன் தேடி வந்தனர்.
விபத்து நடந்து 8 நாட்களான நிலையில் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு வெற்றிதுரைசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட வெற்றி, துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிர் இழந்ததாகவும், சட்லஜ் நதியில் விழுந்த அவரின் சடலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு அடித்து செல்லப்பட்டிருந்ததாகவும், குளிர்ந்த தண்ணீர் என்பதால் உடல் சேதமின்றி அப்படியே இருந்ததாகவும், இமாச்சல் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடும் போராட்டத்துக்கு பிறகு, அவரின் உடலை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். வெற்றிதுரைசாமியின் எடைகொண்ட பொம்மை ஒன்றை வீசி ஆய்வு செய்த போலீசார் அது இழுத்துச்செல்லப்பட்ட திசையை சுற்றி தேடியபோது வெற்றிதுரை சாமியின் உடல் ஆழமான பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
என்றாவது ஒருநாள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள வெற்றி துரைசாமி, மிகச்சிறந்த புகைப்பட கலைஞரும் கூட. அடுத்து ஒரு வெப் தொடரை இயக்க திட்டமிட்டிருந்ததாகவும், இதற்காக, லொகேஷன் பார்க்க இமாச்சல் பிரதேசம் சென்ற போதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. வெற்றித்துரைசாமிக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். ஒரே மகனான வெற்றிதுரைசாமியின் மரணச்செய்தி சைதைதுரைசாமி குடும்பத்தினரை சொல்லொன்னா துயரத்துக்குள்ளாக்கி இருக்கின்றது.