ஆன்லைன் டிரேடிங்கில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 50 நிமிடத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என இன்ஸ்டா பிரபலம் அமலாஷாஜி சொன்னதை நம்பி மோசடி கும்பலிடம் ஒரு லட்சம் ரூபாயை பறி கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார் சென்னை ஐ.டி.ஊழியர் ஒருவர்
அமலா சாஜி மற்றும் அமிர்தா சாஜி என்ற இரட்டை சகோதரிகள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக மிகவும் பிரபலமானவர்கள்.
குறிப்பாக அமலா சாஜி 4.1 மில்லியன் பாலோயர்களை கொண்டு தினமும் சினிமா பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கு ஏற்றவாறு வீடியோ வெளியிட்டு வருகிறார்.
தன்னை ஒரு மினி சமந்தா... குட்டி ரக் ஷிகா என்று கூறிக்கொள்ளும் இவரால் ஐ.டி.ஊழியர் ஒருவர் லட்ச கணக்கில் பணத்தை இழந்துள்ளதாக போலீசில் மோசடி புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அமலா சாஜி தாங்கள் சம்பாதிப்பதற்காக பல ஆன்லைன் நிறுவனங்கள் தொடர்பாகவும் ,பல தொழில் முனைவோர் தொடர்பாகவும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு விளம்பரம் செய்து கல்லாகட்டி வருகின்றனர்.
அந்த வகையில் அமலா சாஜியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வந்த ஐடி ஊழியர் ஒருவர் , அமலாவின் பேச்சை நம்பி இன்ஸ்டா டிரேடிங் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளார்.
அமலா சாஜி தனது சமூக வலைதள பக்கத்தில் அனன்யா பாரக்ஸ் என்ற தனது தோழியின் ஆன்லைன் டிரேடிங் தொழில் பற்றி தெரிவித்து இதில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதித்ததாக விளம்பரம் செய்துள்ளார்.
தன்னைப் பின்பற்றுபவர்கள் விருப்பப்பட்டால் அனன்யா பாரக்ஸ் சமூக வலைதள கணக்கில் குறுஞ்செய்தி அனுப்பி டிரேடிங் மூலம் பணத்தை சம்பாதிக்கலாம் எனவும் கூறியுள்ளார்
அமலா சாஜி தோழி எனக் கூறி விளம்பரம் செய்த காரணத்தினால், ஐடி ஊழியர் அதனை நம்பி அனன்யா போரக்ஸ் என்ற சமூக வலைதள பக்கத்தில் தொடர்பு கொண்டு, அமலா சாஜியின் சமூக வலைதள பக்கம் மூலமாக டிரேடிங் செய்வது குறித்து அறிந்து கொண்டதாக அறிமுகமானார்.
அதில் பேசிய பெண்ணோ, ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தினால் 50 நிமிடத்தில் 10,000 ரூபாயாக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி ஐடி ஊழியர் அந்தப் பெண் அனுப்பிய கியூ ஆர் கோடை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் பணத்தை முதலில் அனுப்பியுள்ளார்.
கிரிப்டோ வேர்ல்ட் என்ற ஆப் மூலமாக டிரேடிங் செய்து உங்கள் வங்கிக் கணக்கில் பன்னிரண்டாயிரம் ரூபாய் லாபம் வந்துள்ளதாக ஸ்க்ரீன் ஷாட் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து இதுபோன்று சம்பாதிக்க வேண்டும் என்றால் முதலீடாக ஒன்பதாயிரம் ரூபாய் பணத்தை தனது வங்கிக் கணக்கில் செலுத்தினால் மொத்தமாக 22,000 ரூபாய் பணத்தை திருப்பி தருவதாக டிரேடிங் செய்யும் பெண் ஆசை காட்டி உள்ளார்.
ஐடி ஊழியர் பணத்தை திருப்பி தந்தால் போதும் என தொடர்ந்து சாட்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே டிரேடிங்கில் உங்களுக்கு லாபமாக ஒரு லட்ச ரூபாய் வந்துள்ளதாக ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி மேலும் ஆசையை தூண்டியுள்ளார்.
டெபாசிட் பணம் உள்ளிட்டவற்றை உடனடியாக அனுப்பினால் மொத்தமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை தருவதாக டிரேடிங் செய்யும் அந்தப் பெண் ஆசை வார்த்தை கூறியுள்ளார்
ஐடி ஊழியரிடமிருந்து ஜிபே எண்ணை வாங்கி பணத்தை செலுத்துவது போன்று முயற்சி செய்துள்ளார்.
ஆனால் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும் பொழுது மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளதாகவும், அதற்கு 31,000 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் எனக் கூறி பணத்தை அனுப்புமாறு இன்ஸ்டாகிராம் டிரேடிங் செய்யும் பெண் ஐடி ஊழியருடன் தெரிவித்துள்ளார்
இதனை நம்பி பணத்தை அனுப்பிய பிறகு இன்னும் பத்து முதல் 20 நாட்களில் பணம் வந்து சேரும் என பெண் கூறியதை நம்பி காத்திருந்தும் பணம் வராததால், சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் டிரேடிங் பெண்மணியை தொடர்பு கொண்ட போது மோசடியில் சிக்கியது அறிந்து ஐடி ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.
இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா சாஜி, மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் டிரேடிங் செய்வதாக மோசடி செய்யும் கும்பல் குறித்து ஐடி ஊழியர் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
பிரபலமான யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்கள் மூலமாக பணம் கொடுத்து விளம்பரம் செய்து, இந்த ஆன் லைன் டிரேடிங் மோசடி கும்பல், பாலோயர்ஸையும், சப்ஸ்கிரைபர்களையும் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய வைத்து ஆசை காட்டி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
Forex என்ற டிரேடிங் நிறுவன பெயரை பயன்படுத்தி ananya_forex,maya_forex என்ற பல்வேறு இன்ஸ்டாகிராம் கணக்குகள் உருவாக்கி ஆயிரக்கணக்கான பாலோவர்கள் இருப்பது போன்று காட்டி பலரையும் நம்ப வைத்து ஏமாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக இது போன்ற மோசடி கும்பல் சமூக வலைதள பக்கத்தில் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி டிரேடிங் நிபுணர்கள் போன்று பேசி பலரிடமும் பணத்தை ஏமாற்றியுள்ளனர்.
அதில் உள்ள புகைப்படங்களை ஆய்வு செய்த போது வெளிநாட்டு மாடல்களின் புகைப்படத்தை எடுத்து அதன் மூலம் சமூக வலைதளக் கணக்கை உருவாக்கி டிரேடிங் செய்வதாக கூறி மோசடியை அரங்கேற்றுவது தெரியவந்துள்ளது
குறிப்பாக அமலா சாஜி போன்ற இன்ஸ்டா பிரபலங்கள் விளம்பரத்தில் நடிக்க 30 நொடிகளுக்கு 2 லட்சம் ரூபாய் காசு கேட்பதாக சமீபத்தில் சினிமா பிரபலம் பேசியது குறிப்பிட தக்கது.
அதே நேரத்தில் அமலா சாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு பொருளாதார நிபுணர் இல்லை எனவும் பொதுமக்கள் தான் செய்யும் விளம்பரங்கள் குறித்து ஆய்வு செய்து முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தான் பொறுப்பேற்க முடியாது எனவும் தனது சமூக வலைதள பக்கத்தில் தெளிவாக பதிவு செய்திருப்பதாக, அமலா சாஜி தரப்பில் கூறப்படுகிறது
எனவே ஆன்லைன் டிரேடிங் பங்குச் சந்தையில் முதலீடு உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் சமூக வலைதளத்தில் பிரபலமானவர்கள் நடிகர்கள் நடிகைகள் தெரிவிப்பதாக நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.