கூடங்குளத்தில் மேலும் புதிய அணு உலைகளை அமைப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப்பயணமாக 5 நாட்களுக்கு மாஸ்கோ சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மான்ட்டுரோவ் உள்ளிட்டோருடன் இருதரப்பு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இருதரப்பு வர்த்தக உறவுகள் குறித்தும் இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், வர்த்தகம், மின்சார உற்பத்தி, நிதி நிர்வாகம், பயணிகள் விமானப் போக்குவரத்து, அணு உலைகள், மருத்துவம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்புக்கும் இடையே கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைப்பது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்