ஆள்கடத்தல் புகார் காரணமாக ஃபிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்தியர்கள் 3 நாட்களுக்கு பின்னர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர்.
விமானத்தில் வந்த 276 பேரிடம் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் மற்றும் குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகு பயணிகள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் சிலரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துபாயில் இருந்து நிகரகுவா நோக்கிச் சென்ற விமானத்தில் சட்டவிரோதமாக ஆள்கடத்தல் நடப்பதாக புகார் வந்ததையடுத்து அந்த விமானத்தை ஃபிரான்ஸ் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.
விசாரணையில் கடத்தல் தொடர்பான புகார் நிரூபிக்கப்படாததால் விமானம் இந்தியாவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்ப உதவியதற்காக ஃபிரான்ஸ் அரசுக்கு அங்குள்ள இந்தியத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.