நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவது குறித்து தம்முடன் ஆலோசிக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் மறுத்தது மிகுந்த வேதனை அளித்ததாக குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீக்கம் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு தனித்தனியாக அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அவை நடைமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீக்கப்பட்டதாகவும், பொது நலனுக்கு எதிராக இருந்ததால் அது தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நேரில் சந்தித்துப் பேச தயாராக இருப்பதாகவும் தன்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கார்கே தெரிவித்துள்ளார்.