சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ஆம் தேதி லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடையும் சரியான நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை விண்கலம் அடைந்தவுடன் அந்த இடத்திலேயே சுற்றிவந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.
சூரியனின் செயல்பாடு மற்றும் அதனால் நம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த அந்தத் தகவல்கள் இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கே முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.