விரும்பத்தகாத ஒரு சில சம்பவங்களால் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் நியூ யார்க் நகரில் வசித்து வருகிறார். அவரை கொலை செய்ய நடந்த சதியில் இந்திய அதிகாரி ஒருவருக்கும் நிகில் குப்தா என்ற இந்தியருக்கும் தொடர்புள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், சதி தொடர்பான தகவல்களை கொடுத்தால் அது பற்றி நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசு உறுதி பூண்டிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
அதே சமயம், இந்திய - அமெரிக்க உறவை பலப்படுத்த வேண்டும் என்று இரு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், இரு நாடுகளுக்கு இடையே நிலையான உறவு இருப்பதற்கு அதுவே அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார்.