இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதலின் 22-ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இத் தாக்குதலில், டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 5 போலீஸார் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் அவர்களுடைய படங்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி உரையாடினார்.
நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தைரியமும், தியாகமும் தேசத்தின் நினைவுகளில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.