இந்தியாவின் தலைமையில் சர்வதேச வளர்ச்சி ஏற்படும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
குஜராத்தின் நிதித் தொழிற்நுட்ப மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்களின் பிரதிபலிப்பு என கூறினார்.
பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலான நாடுகள் நிதி சார்ந்த நிவாரண நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தியபோது, நீண்ட கால வளர்ச்சி மற்றும் பொருளாதார திறனை விரிவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்தியதாக அவர் கூறினார்.
நல்லாட்சி மற்றும் மக்கள் நலனிற்கு முன்னுரிமை அளித்து பணியாற்றியதால் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.