உத்தர்காசி சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் ஆரோக்கியமாக இருப்பதாக மீட்புக் குழுவின் மருத்துவ அதிகாரி பிம்லேஷ் ஜோஷி தெரிவித்தார்.
17 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட உடன் சுரங்கத்திற்குள்ளேயே தொழிலாளர்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சின்யாலிசார் சமூக மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்களை 18 மருத்துவர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மீட்கப்பட்டது முதல் தொழிலாளர்களுக்கு அரிசி சாதம், பனீர், வேகவைத்த முட்டை, ரொட்டி, காய்கறிகள் அடங்கிய சத்துணவு வழங்கப்பட்டு வருவதாக மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய தேவை இல்லையென்றாலும், கூடுதல் மருத்துவக் கண்காணிப்புக்காக தொழிலாளர்கள் அனைவரையும் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.