விமானம் தாங்கிக் கப்பல், 97 கூடுதல் தேஜாஸ் போர் விமானங்கள், 156 பிரசந்த் போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்க உள்ளது.
வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எட்டப்பட உள்ளது.
அதன் பின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் மற்றும் வணிகப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் துவங்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தளவாடங்கள் அனைத்தையும் தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும் என்றும், சீனா தனது போர்த் திறனை மேம்படுத்தி வரும் நிலையில், இந்த தளவாடங்களை உற்பத்தி செய்வது இந்தியாவின் ராணுவத் தயார் நிலையை வலுப்படுத்தும் என்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றுள் 97 தேஜாஸ் மார்க்-1 ஏ போர் விமானங்களை தயாரிக்க 55 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும், கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட உள்ள விமானம் தாங்கி போர்க்கப்பலை தயாரிக்க 40 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.