வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை மீறி இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் அடுத்த காலாண்டிலும் உற்பத்தித் துறை வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என இந்திய தொழிற்கூட்டமைப்பான ஃபிக்கி தெரிவித்துள்ளது.
ஜூலை மற்றும் செப்டம்பர் வரையிலான காலாண்டில் வாகனம், கட்டுமானம், சிமெண்ட், ரசாயன உரம் மற்றும் மருந்தியல், மின்னணு, உலோகம், ஜவுளி, காகித உற்பத்தி உள்ளிட்ட 10 துறைகள் எப்படி செயல்பட்டன என்பதற்கான ஃபிக்கியின் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.
சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்ட நிறுவனங்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், இந்திய உற்பத்தித் துறை, முதல் காலாண்டை விட கடந்த காலாண்டில் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாகவும், இந்த வளர்ச்சி நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறையில் 82 சதவீதம் பேருக்கு வேலைக்கு ஆள் கிடைப்பதில் சிக்கல் இல்லாத நிலையில், 18 சதவீதம் நிறுவனங்களுக்கு திறமை வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதில்லை என்றும் ஃபிக்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.