நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 - ஆக பதிவாகி இருந்தது. அந்நாட்டில் ஜாஜர்கோட் மாகாணத்தின் லாமிடாண்டா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட் மற்றும் ருகும் மாகாணங்களில் கட்டடங்கள் குலுங்கின. அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா நேரில் பார்வையிட்டார்.
நிலநடுக்கத்தால் உறவுகளையும், உடமைகளையும் இழந்து கதறி அழுத மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.