இந்தியா உடனான எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், போர்களை எதிர்த்துப் போராடி வெற்றிபெறும் திறனை சீனா வலுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளளது. 2049 ஆம் ஆண்டுக்குள் உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தை உருவாக்குவதே சீனாவின் இலக்கு என்றும் பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்திய, சீன எல்லையில் உள்ள டோக்லாம் அருகே நிலத்தடி சேமிப்பு வசதிகள், புதிய சாலைகள், பூட்டானின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் புதிய கிராமங்களையும் சீனா உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாங்காங் ஏரியின் மீது இரண்டாவது பாலம் மற்றும் இரட்டைப் பாலம், ஹெலிகாப்டர் தளங்களையும் சீனா கட்டமைத்து வருவதாகவும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.