உத்தரப்பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்தபோது வழி தவறி கடலூரில் இறங்கிய மூதாட்டியை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சில்வர் பீச் பகுதியில் சுற்றித் திரிந்த வடமாநில மூதாட்டியினை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த மூதாட்டிக்கு போஜ்புரி தவிர வேறு எந்த மொழியும் தெரியாததால் விசாரணை நடத்துவதில் போலீசாருக்கு சிக்கல் காணப்பட்டது.
இதனை அடுத்து அந்த மூதாட்டி கடலூர் முதுநகர் முதியோர் காப்பகத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டார். போஜ்புரி மொழி தெரிந்த ஒருவரின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உத்தரப் பிரதேச மாநிலம் பன்வாரியைச் சேர்ந்த குஷ்மரணி எனத் தெரிய வந்தது.
ராமேஸ்வரத்திற்கு சென்றுவிட்டு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பிய போது வழிதெரியாமல் கடலூரில் இறங்கியதும், செலவுக்கு பணம் ஏதும் இல்லாததால் மூதாட்டி கடலூரில் சுற்றித் திரிந்ததும் தெரிய வந்தது. மூதாட்டியின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் வந்து அழைத்துச் சென்றனர்.