மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். மிசோரமில் நவம்பர் 7, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 23, தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதிகளில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் மொத்தம் 679 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும், மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும், அவர்களில் சுமார் 60 லட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்க உள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டார்.