சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
அம்மாநிலத்தில் நேற்று முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் டீஸ்டா ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அந்த ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளப்பெருக்கால் மேற்கு வங்கத்துடன் சிக்கிமை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையும் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டீஸ்டா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் லாச்சென் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களும், வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கீழணையில் 15 முதல் 20 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.