ஆந்திராவில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பலத்த பாதுகாப்புடன் ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த 2018-ம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் 371 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து விஜயவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக சந்திரபாபு நாயுடுவை அவருடைய மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் ஆகியோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தனர். பின்னர் ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று ஆந்திரா முழுவதும் முழு அடைப்புக்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு ஜனசேனா, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காவண்ணம் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்குதேசம் கட்சியின் முக்கிய தலைவர்களை போலீசார் வீட்டுக்கு காவலில் வைத்துள்ளனர்.
இந்தநிலையில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருத்தணியிலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன.