ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய சட்டத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருடன் 15-வது நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் சி கஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்rய் கோத்தாரி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு மக்களவைத் தேர்தலுடன், மாநில சட்டப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் ஒன்றாக சேர்த்து நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டால், அதற்கு மாநில பேரவைகளின் ஒப்புதல் தேவையா என்று இக்குழு ஆராய உள்ளது.
தொங்கு நாடாளுமன்றம், நம்பிக்கையில்லா தீர்மானம், கட்சித் தாவல் போன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்கான தீர்வுகளை இக்குழு பரிந்துரைக்கும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தேவையான ஆள் பலம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் போதிய அளவில் உள்ளதா என்றும் இக்குழு ஆராயும். உடனடியாக பணிகளை தொடங்கும் இக்குழு விரைவில் பரிந்துரைகளை வழங்கும் என்றும் மத்திய அரசு அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.