உடன்பிறந்த மற்றும் உடன்பிறவாத சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி கட்டும் ரக்சாபந்தன் விழாவை நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின் பாச பந்தம்தான் சகோதரன்-சகோதரி உறவு. ஒரே தாயிடம் பிறந்து ஒன்றாக வளர்ந்து, அன்புக்கும் அரவணைப்புக்கும் பிணைப்புக்கும் ஆளாகும் உறவை, மேலும் பலப்படுத்தி இனிக்க வைக்கும் திருவிழா ரக்சா பந்தன்.
உடன்பிறவாத சகோதர-சகோதரிகளும் தங்களுக்குள் பாசத்தை, அன்பை, நெருக்கத்தை உறுதிபடுத்திக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் உறவில் இணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ரக்சா பந்தனை கொண்டாடுகின்றனர்.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமி நாளில் ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சகோதரனின் மணிக்கட்டில் சகோதரி ராக்கி கயிற்றை கட்டி, அனைத்து நலன்களும் பெற்று சகோதரன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வாழ்த்துவார். ராக்கி அணிவிக்கும் சகோதரியின் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களிலும் துணை நின்று காப்பாற்றவும், பாதுகாக்கவும் சகோதரன் வாக்குறுதி அளிப்பார்.
தாங்கள் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ ஆரத்தி எடுத்து திலகமிட்டு வாழ்த்தும் வளைக்கரங்களுக்கு, சகோதரர்கள் பரிசுகளைக் கொடுத்து மகிழ்விக்கின்றனர். ஆண்டுதோறும் ரக்சா பந்தன் பண்டிகை வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் வயது கூடிக்கொண்டே போனாலும் அன்புக்கு மட்டும் வயதாவதே இல்லை.