இந்தியாவின் உறுதியான பன்முகத்தன்மை கலாச்சாரத்தால் பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற ஜி20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர், மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் கலாச்சாரத்திற்கு உள்ளதாக கூறினார்.
கலாச்சார பாரம்பரியம் என்பது வெறும் கல்லில் பொறிக்கப்படுவது அல்ல என்று பேசிய அவர், கலாசாரம் என்பது தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பண்டிகைகளில் உள்ளதாக தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு பாரம்பரியம் இன்றியமையாதது என்றும் அவர் கூறினார். பாரம்பரிய கைவினை கலைஞர்களின் வாழ்க்கையை வளமாக்குவதுடன், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க, விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு முதல்கட்டமாக 1.8 பில்லியன் டாலர் தொகை விரைவில் விடுவிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.