நிலவில் சந்திரயான் மூன்றின் லேண்டர் தடம் பதித்த ஆகஸ்ட் 23ஆம் நாள் இனி ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு தான் பயணம் மேற்கொண்டிருந்தாலும், மனது முழுவதும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே இருந்ததாக தெரிவித்தார்.
விஞ்ஞானிகளின் பொறுமை, கடின உழைப்பு, உத்வேகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குவதாக கூறினார்.
இந்தியாவின் கவுரவமும், பெருமையும் உலகிற்கே பறைசாற்றப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர், சந்திரயான்-3 திட்டம், நிலவை ஆய்வு செய்வதற்கான புதிய வாசல்களைத் திறந்துள்ளதாகவும், இந்திய விஞ்ஞானிகளின் அறிவியல்பூர்வ எழுச்சியை, உலகமே வியந்து பார்ப்பதாகவும் பாராட்டினார்.
சந்திரயான்-3ன் வெற்றிக்கு, பெண் விஞ்ஞானிகள் முக்கியப் பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பகுதி சிவசக்தி என அழைக்கப்படும் என்று கூறினார்.
2019ல் சந்திரயான்-2 நிலவில் தடம்பதித்த இடம் மூவர்ணக்கொடி என பொருள்படும் வகையில் திரங்கா என அழைக்கப்படும் என்றும், எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நினைவூட்டவே திரங்கா எனப் பெயர் சூட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்திய இளைஞர்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தட்டி எழுப்பியிருப்பதாகவும், விண்வெளி தொழில்நுட்பம் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.