உலகிலேயே இந்தியாவில்தான் குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படுவதாகவும், அதை நாட்டில் 85 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்று வரும் ஜி20 நாடுகளின் பொருளாதார அமைச்சர்கள் மாநாட்டில் அவர் காணொலி மூலம் பேசினார்.
அப்போது இதை தெரிவித்த மோடி, ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார் மற்றும் இணைய சேவை மூலம், பணப் பரிமாற்றத்திலும் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
குறிப்பாக, உடனடி பணப் பரிமாற்றத்தில் உலகிலேயே 45 சதவீதம் இந்தியாவில் நடப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில், பாஷினி என்ற பெயரில், மொழிப் பெயர்ப்புத் தளத்தை இந்தியா உருவாக்கி வருவதாக பேசிய மோடி, மனிதகுளம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தொழில்நுட்பத்திலும் தீர்வு உண்டு என்றார்.
அதற்கு நம்பிக்கை, அர்ப்பணிப்பு, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு தேவை என்றும் கூறினார்.