சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தின் மீது தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதற்காக தேசியக் கொடி வெள்ளித்தட்டில் வைக்கப்பட்டு மூலவருக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் முன்பு அமைந்துள்ள விளக்குத்தூண் பகுதியில் அர்ச்சனைக்குப் பிறகு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கோயில் யானை காந்திமதி இதில் பங்கேற்று தேசியக் கொடிக்கு மரியாதையை செலுத்தியது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஈதுகா பள்ளி வாசலில் தேசியக் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலம் மலர் சந்தையில் ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் முன்னிலையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசல் முன் தேசியக் கொடி ஏற்றி சிறுவர் சிறுமியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.