பாரம்பரிய திறன் கொண்ட தொழிலாளர்களுக்காக 13 முதல் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அடுத்த மாதம் விஸ்வகர்மா யோஜனா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் குடிமக்கள் 140 கோடி பேரும் தமது குடும்பம் என்று கூறினார்.
மணிப்பூர் மாநிலத்துடன், நாடு ஒன்றுபட்டு நிற்பதாகவும், மணிப்பூரில் அமைதி நீடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிடுக்குப் பின் பின் உலகத்தை இந்தியா வழிநடத்தி வருவதாகவும், பெருந்தொற்று காலத்துக்குப் பின் உலகின் நண்பனாக இந்தியா மாறியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
வளர்ச்சியை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த ஊழல் என்ற ராட்சதனை முழுவதுமாக ஒழிக்க தமது அரசு உறுதி பூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
2014 மற்றும் 2019-ல் நிலையான மற்றும் வலிமையான அரசை மக்கள் 2 முறை அடுத்தடுத்து தேர்வு செய்ததால், சீர்திருத்தங்கள் கொண்டு வர முடிந்ததாக அவர் கூறினார்.
2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்குவதே தமது கனவு என தெரிவித்த பிரதமர், தாம் அளித்துள்ள வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அடுத்த ஆண்டு செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு தான் பேசும்போது பட்டியலிட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.