திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தடை செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை 2016 ஆம் ஆண்டில் மீண்டும் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் பிரதமர் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோலை கைத்தடி எனக்கூறி அருங்காட்சியகத்தில் வைத்தவர்கள் காங்கிரசார் என்றார்.
ஆனால், அதே செங்கோலை புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவி தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் மோடி என்று அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முறையாக திருக்குறளை கோட்டிட்டு பேசியவர் பிரதமர் மோடி என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புறநானூறு, திருக்குறள் ஆகியவற்றை மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பல முறை குறிப்பிட்டு பேசியதை அவர் சுட்டிக்காட்டினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வகுப்புகள் நடப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், 900 படுக்கைளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இவர்கள் வெளிநடப்பு செய்யும் முன்பு, தமிழ்நாட்டை பத்தி நிறைய சொல்ல வேண்டும், வெளியே போகாதீர்கள் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.