தேசம் படுகொலை செய்யப்படுவதாக ராகுல் பேசியதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மக்களவையில் ராகுலைத் தொடர்ந்து பேசிய ஸ்மிருதி இராணி, எதிர்க்கட்சியினர் இந்தியா அல்ல என்றும் அவர்கள் தான் ஊழல் மற்றும் திறமையின்மையின் அடையாளம் என்றும் கூறினார்.
திறமைக்கு மதிப்பு தரும் தற்போதைய இந்தியாவில் ஊழலுக்கும் வாரிசு அரசியலுக்கும் இடமில்லை என்றார் அவர். இந்தியா என்றால் அது வட இந்தியா மட்டும் தான் என்று தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர் கூறியதை தட்டிக்கேட்கும் துணிச்சல் ராகுலுக்கு உண்டா என்றும் அவர் வினவினார்.
1984 ஆம் ஆண்டு சீக்கியர் கலவரம் மற்றும் காஷ்மீர் பண்டிதர்கள் படுகொலைகளுக்கு காங்கிரஸ் பொறுப்பேற்குமா என கேள்வி எழுப்பிய ஸ்மிருதி, எதிர்க்கட்சியினர் விரும்புவது போல காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு மீண்டும் அமல்படுத்தப்படாது என உறுதிபட தெரிவித்தார்.
பழங்குடியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தையும் மீறி அதானிக்கு நிலமும் கடனும் வழங்கியது காங்கிரஸ் ஆட்சி தான் என்று குற்றஞ்சாட்டிய ஸ்மிருதி இராணி, அதானியுடன் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் உள்ளது போன்ற புகைப்படத்தை அவையில் காட்டினார்.