ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவு திரும்பப்பெறப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் மக்களவை கூட்டத்தில் பங்கேற்றார்.
அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்திற்கு சென்ற ராகுலுக்கு எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் வரவேற்பளித்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு மக்களவை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
ராகுல் நாடாளுமன்றத்துக்கு சென்றதை முன்னிட்டு டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இண்டியா கூட்டணியின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தார்.